முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சைனாபாம் கொவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இராணுவ மருத்துவமனை வைத்தியர்கள் ஊடாக குறித்த ஆடைத்தொழிற்சாலையில் வைத்தே அங்கு பணிப்புரியும் ஊழியர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1200க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் 17ஆம் திகதி, இந்த தொழிற்சாலையில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஒருமாத காலமாக தொழிற்சாலை மூடப்பட்டு, மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஊழியர்களை பாதுகாக்கும் நோக்குடன் சைனாபாம் கொவிட் – 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.