மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.
க்ரெனடா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவுமா 46 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கொய் 3 விக்கெட்டுகளையும் கெவீன் சின்கிளாயர் 2 விக்கெட்டுகளையும் ஜேஸன் ஹோல்டர் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி பிளெட்சர் 35 ஓட்டங்களையும் பெபியன் அலென் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி, ஹென்ரிச் நோட்ஜே மற்றும் டப்ரைஸ் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முக்கிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோர்ஜ் லிண்டே தெரிவுசெய்யப்பட்டார்.