2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்த தொடரில், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகள் இரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றது.
இதன்படி உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ரவுண்ட்-16 சுற்றுப் போட்டியில், குரேஷியா அணியும் ஸ்பெயின் அணியும் மோதின.
பார்க்கென் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் ஸ்பெயின் அணி சார்பில், பாப்லோ சரபியா 38ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், சீசர் அஸ்பிலிகுயெட்டா 57ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஃபெரான் டோரிஸ் 77ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், அல்வரோ மோராடா 100ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், மைக்கேல் ஓயர்சபல் 103ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
குரேஷியா அணி சார்பில், ஸ்பெயின் அணியின் வீரரான பெட்ரி 20ஆவது நிமிடத்தில் ஓன் கோல் அடித்து கொடுத்தார்.
மேலும், குரேஷியா அணி வீரர்களான மிஸ்லாவ் 85ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், மரியோ பசாலிக் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற போட்டியில், பிரான்ஸ் அணியும் சுவிஸ்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
தேசிய அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பெனால்டி சூட் அவுட் முறையில் சுவிஸ்லாந்து அணி 5-4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
முன்னதாக இரு அணிகளும் தலா மூன்று கோல்களை புகுத்தின. இதில் பிரான்ஸ் அணி சார்பில், கரீம் பென்ஸிமா 57ஆவது மற்றும் 59ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். போல் போக்பா 75ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
சுவிஸ்லாந்து அணி சார்பில், ஹரிஸ் செபரோவிச் 15ஆவது மற்றும் 81ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். மரியோ கௌரனோவிச் 90ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதன்படி எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியும் சுவிஸ்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.