யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதாவது யாழில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு, யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69 மற்றும் ஜே,71 கிராம அலுவலர் பிரிவு மற்றும் கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் பணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெறும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.