வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி ‘நாய்’ என விளித்து பேசியதாக மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை ஒரு மாத காலத்திற்கு சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே தனக்கு விதிக்கப்பட்ட தடை, சட்டத்திற்கு முரணானது என கூறி, மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால் வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.