மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலைமை காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு பெரியகல்லாறு 02ஆம், 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் நேற்று முன்தினம் பெரியகல்லாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலைமையே காணப்படுகின்றது.
ஆகவே மக்கள், சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.