கடந்த பல மாதங்களில் முதல்முறையாக, அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனால், சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் புதிய திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜூலை 09ஆம் திகதி வரை முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய உத்தரவுகளுக்குப் பிறகு, சுமார் 50 இலட்சம் மக்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர குவின்ஸ்லாந்து மற்றும் அவுஸ்ரேலியாவின் மேற்குப் பகுதியில், ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே தென்கிழக்கு, டவுன்ஸ்வில்லே, மக்னெடிக் தீவு மற்றும் பாம் தீவு ஆகிய பகுதிகளுக்கு மூன்று நாள் முடக்கநிலை கட்டுப்பாடுகளை குயின்ஸ்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள உள்ளூர் தொற்றுப் பரவலை கண்காணிக்கும் மாநில அதிகாரிகள், சர்வதேச வருகையை கட்டுப்படுத்தவும், ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு தீர்வு காணவும் மற்றும் தடுப்பூசி தயாரிப்பை விரைவுபடுத்தவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல், நாளொன்றுக்கு சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 30 – 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
அவுஸ்ரேலியாவில் இதுவரை 4.7 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாவது அளவு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.