யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன்காரணமாக யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று(புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புத் தொடர்பில் கேள்வியுற்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நேற்றுக் காலை அங்கு சென்றுள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்தவரின் சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் வீட்டிலிருந்தவர்களிடமும் மாதிரிகளைப் பெற்றனர்.
பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் மற்றும் அவரது குடும்பத்தில் மூவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.