பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே பிரித்தானியா போர்க்கப்பல், ரஷ்யாவின் ஒரு பகுதியான கிரீமியாவுக்குள் அத்துமீறியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான ஹெச்.எம்.எஸ் டிஃபண்டர் கப்பல் கடந்த 23ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதையடுத்து, பிரித்தானிய கப்பலை எச்சரிக்கும் வகையில் தங்களது போர்க் கப்பல்கள் சுட்டதாகவும் தங்களது போர் விமானமொன்று பிரித்தானிய கப்பல் சென்ற பாதையின் குறுக்கே குண்டுவீச்சு நடத்தியதாகவும் ரஷ்யா கூறியது.
எனினும், எந்த நோக்கமும் இல்லாமல் உக்ரைன் கடல் எல்லையில் உள்ள, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கடல்வழித்தடத்தில் தங்கள் கப்பல் சென்றதாக பிரித்தானியா கடற்படை தெரிவிக்கிறது.
இந்தநிலையில் இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்,
‘கடந்த வாரம் கிரீமியா கடல் எல்லைக்குள் பிரித்தானிய கப்பல் அத்துமீறி நுழைந்தபோது, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் அந்தக் கப்பலுடன் தொடர்பில் இருந்து உதவிகள் செய்தது. அந்தச் சம்பவத்தின்போது ரஷ்யாவின் எதிர்வினைகள் குறித்து அறிந்துகொண்டு, அதனை பிரித்தானியா கப்பலிடம் தெரிவிக்கும் செயலில் அமெரிக்க விமானம் ஈடுபட்டது.
எனினும், இந்த விபரம் ரஷ்யாவுக்குத் தெரியும் என்பதால், இரகசியத் தகவல்கள் எதுவும் அமெரிக்க கண்காணிப்பு விமானத்திடம் செல்லாத வகையில் அதிகாரிகள் செயற்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின்போது பிரித்தானிய கப்பலை நாங்கள் மூழ்கடித்திருந்தால் கூட மூன்றாம் உலகப் போர் மூண்டிருக்காது. காரணம், அத்தகைய ஒரு போரை இனி வெல்ல முடியாது என்பது மேற்கத்திய நாடுகளுக்கு நன்றாகவே தெரியும்.
பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த அத்துமீறல் நடத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் உலகப்போர் வருவதற்கான சூழல் இல்லையென்றாலும், உக்ரைனில் அல்லது உக்ரைனுக்கு அருகில் ராணுவ தளங்களை அமைக்க முயலும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இதுவும் ஓர் அங்கம்’ என கூறினார்.
உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமீயா தீபகற்பத்தை ரஷ்யா கடந்த 2014ஆம் ஆண்டு தங்களது எல்லையுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.