தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் ஏமாற்றமடைந்தமையால் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
45 மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை ஒரு கோடியே 46 இலட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டது. இதில் ஒரு கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.