கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா தொடர்பாக விசேட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதன்போது வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஆராயப்பட்டது.
மேலும் ஹோட்டல்களை நடாத்துதல், சுற்றுலாத்தலங்களை மீண்டும் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க “கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும்.
மேலும் சுற்றுலாத்துறையினை விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் விரைவில் முன்னெடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.