ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று.
எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எதிர்வரும் மாதங்களில் அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கும்’ என கூறினார்.
ஆப்கானின் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஃபவாத் அமன், ‘அமெரிக்க மற்றும் கூட்டணி படைகள் தளத்திலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டன, இனிமேல் ஆப்கானிய இராணுவப் படைகள் அதைப் பாதுகாத்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும்’ என ட்வீட் செய்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
‘செப்டம்பர் 11’ காலக்கெடு 2001ஆம் ஆண்டு அமெரிக்கா மீதான அல்-கொய்தா தாக்குதலின் ஆண்டு நிறைவாகும். இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்தனர். இதுவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தூண்டியது.