இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகள், கொரோனா நெருக்கடி, வடக்கு- கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பினை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனும் விரைவில் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.