இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பொது மனுக்கள் சமர்ப்பிப்பு மற்றும் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தை அடுத்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இலங்கையின் பிரபலமான தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் பிரபலமான சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து, குறித்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் இது ஊடக சுதந்திரத்தை மீறும் அடிப்படைவாதச் செயற்பாடாகும் என்றும் சபையில் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த விவாகரம் தொடர்பாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பதில் வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து அமைச்சின் அறிவிப்பை வாசிக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன எழுந்தபோது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தான் முன்வைத்த குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்த்தன உரிய பதிலை சபையில் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இவர் மட்டுமன்றி, எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சரிடம் இதற்கு பதில் வழங்க வேண்டும் என சபையில் தொடர்ச்சியாக கோஷமெழுப்பியவாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த கோரிக்கைகளை அடுத்து உரையாற்றிய அமைச்சர் பந்துல, இலங்கையிலுள்ள எந்தவொரு ஊடக நிறுவனத்தையும் அச்சுறுத்த அரசாங்கம் நினைக்கவில்லை என்றும் பொய்யான கருத்துக்களை கூறி சபையின் நேரத்தை எதிரணியினர் வீணடிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஊடகவியலாளர் ரிச்சட்டி சொய்சாவின் மரணத்திற்கு காரணமான தரப்பினர் இன்று ஊடக சுதந்திரம் குறித்து கருத்து வெளியிடுவதாகவும் தங்களின் அரசாங்கம் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பினையும் சுதந்திரத்தையும் தொடர்ச்சியாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், நல்லாட்சிக் காலத்தில்தான் அரசியல் பழிவாங்கல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் பந்துல, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் தொடர்ச்சியாக இவ்வாறு செயற்படுவதானது நாடாளுமன்றுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயற்பாடாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சர்களோ ஊடகங்களை கட்டுப்படுத்துவோம் என எங்கும் கூறாத நிலையில், எதிரணியினர் சர்வதேசத்திற்கு பொய்யான கருத்தைக் கூறவே இவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள் என்றும் இது சர்வதேச சதியின் ஓர் அங்கம் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டுக்கொண்டிருக்கும்போதே, எதிரணியைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு சபையில் சர்ச்சை நீடித்துக்கொண்டிருக்கும்போதே சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி எதிரணியினர் அனைவரும் எழுந்து நின்று, ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷமெழுப்பினர்.
இதனையடுத்து ஆளும் தரப்பினரும் எழுந்து நின்று கூச்சலிட்டு, எதிரணியினருக்கு எதிர்ப்பினை வெளியிட்டமையால் நாடாளுமன்றில் இன்று சிறுது நேரம் குழப்பமான நிலைமை நீடித்தது.