தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க இது வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அவர்களுக்கு வயது வேறுபாடு இன்றி தடுப்பூசி வழங்க சுகாதார துறை அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் ச.மைக்கல் கொலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் தடுப்பூசி போடப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
தடுப்பூசியானது முதலில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போடப்பட்டது. அடுத்து மக்களுடன் தொடர்புடைய அரச உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், முப்படையினர் என கட்டம் கட்டமாக போடப்பட்டு தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டு வருகின்றது.
அடுத்த கட்டமாக அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும், அனைத்து கிராமங்களிலும், அனைத்து வீடுகள், வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள், பொது மக்கள் பயன்படுத்தும் பொது இடங்கள் அனைத்துக்கும் சென்று கழிவுகளை அகற்றும் சுகாதார தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டியவர்களில் சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்கள் போன்றவர்களும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள்.
எனவே எதிர்வரும் காலங்களில் அவர்களை முன்னுரிமைப்படுத்தி தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவாக கேட்டுக்கொள்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.