கொரோனா பெருந்தொற்றுகளை சமாளிக்க மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த 23 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது அலை பரவல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த அவசரகால நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்வாயிலாக நாடு முழுவதும் 20 ஆயிரம் ஐ.சி.யு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் கூடுதலாக கிடைக்கும்.
அதேநேரம் இந்த நிதி அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் முழுமையாக பயன்படுத்தப்படும். இதில் 15 ஆயிரம் கோடி ரூபாயை தன் பங்காக மத்திய அரசு அளிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.