ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரஜினி இரசிகர் நற்பணி மன்றமாக செயல்படவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான இரசிகர் பெருமக்களுக்கும் வணக்கம்.
நான் அரசியலுக்கு வர முடியவில்லை என கூறிய பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் நிலை என்ன என்பது மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் இரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.
காலசூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் இரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.