பொலிஸார் ஒருபோதும் அவர்கள் விரும்பியபடி சட்டத்தை மீறி தன்னிச்சையாக செயல்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடுவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரிலேயே பொலிஸார் செயற்பட்டனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். நோய் பரவல் காரணமாக அனைத்து போராட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அன்று காலை போராட்டக்காரர்களிடம் சொன்னோம். நாங்கள் பதாகைகளை வைத்தோம். ஒலிபெருக்கி மூலம் வர வேண்டாம் என்று கூறினோம். இது போன்ற ஒரு உத்தரவு இருப்பதாக கூறினோம்.
அதையெல்லாம் கேட்காமல், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி போராட்டத்தில் பங்கேற்றனர். பொலிஸார் அவர்களை இதன்போதுதான் கைது செய்தனர்.
பொலிஸார் விரும்பியதால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படவில்லை. இவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களால் அனுப்பப்பட்ட எழுத்து மூல ஆவணம் எங்களிடம் உள்ளது.
அதைத்தான் நாங்கள் செய்தோம். எனவே, அதற்காக யாரும் பொலிஸாரை குறை கூற முடியாது.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.