ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கான ‘Operation Allies Refuge’ என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில்,
‘அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்’ என கூறினார்.
முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும்வரை, மீட்கப்படும் சுமார் 2,500பேர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள அமெரிக்காவின் படைத்தளத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
ஆஃப்காஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற நிலையில், தலிபான்களுக்கு எதிராக போராட அங்குள்ள பெண்கள் ஆயுதமேந்த தொடங்கியுள்ளனர்.
இதனிடையே ஆஃப்காஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.