சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
ஹராரே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாதேவரே 56 ஓட்டங்களையும் பிரெண்டன் டெய்லர் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் சகிப் ஹல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட், சய்பூதின் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆட்டமிழக்காது சகிப் ஹல் ஹசன் 96 ஓட்டங்களையும் மொஹமட் சய்பூதின் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், லூக் ஜோங்வே 2 விக்கெட்டுகளையும் பிளெஸிங் முஸரபானி, ரிச்சர்ட் ன்கரவா, மாதேவரே மற்றும் சிகாண்டர் ரஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 109 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடங்களாக ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சகிப் ஹல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.