நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த சிறுமியை பணிக்கு இணைத்துக்கொள்வதற்கு முன்னர் அங்கு பணியில் இருந்த 21 மற்றும் 32 வயதுடைய பெண்கள் இருவரிடம் முன்னதாக வாக்குமூலம் பெறப்பட்டது.
அதேநேரம், கடந்த 21ஆம் திகதி டயகம பகுதியில் வைத்து குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இதேநேரம், ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் தரகர் உட்பட நால்வரையும் 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.