இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் இருப்பினும் ஈராக் இராணுவத்திற்கு தொடர்ந்தும் பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமியுடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க படைகள் உள்ள நிலையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டுக்கு உதவும் முயற்சியாக அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை அப்படியே வைத்திருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தலைநகர் பாக்தாத்தில் நடந்த அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ஜெனரல் மற்றும் ஈரான் ஆதரவு ஷியா முஸ்லீம் போராளிகளின் தலைவர் கொல்லப்பட்டதிலிருந்து ஈராக்கில் அமெரிக்காவின் இருப்பு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.