ஈரானில் நீர் பற்றாக்குறை தொடர்பான வன்முறை போராட்டத்தின் போது, குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என மற்றொரு அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த போராட்டங்கள் தென்மேற்கு குஜெஸ்தான் மாகாணத்தில் தொடங்கி மேற்கு லொரேஸ்தான் மாகாணத்தில் உள்ள அலிகூடார்ஸ் நகரத்திற்கு பரவியது.
இந்த போராட்டத்தின் போது, பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகின. வீதிகளுக்கு குறுக்கே மரக்கட்டைகள் மற்றும் டயர்களை போட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதனிடையே மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஈரான் நாட்டு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைதியான எதிர்ப்பாளர்களிடையே ஊடுருவிய சில அறியப்படாத நபர்கள் நிகழ்த்திய வன்முறைகளால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈரானின் மிக மோசமான வறட்சியின் போது நீர் பற்றாக்குறை தொடர்பாக மக்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
வீடுகள், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மின்சாரம் ஆகியன இந்த வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.