சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தடைச்சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.