அணு ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை சீனா விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதன்படி சின்ஜியாங் மாகாணத்தில் செயற்கைக்கோள் அணு ஏவுகணை தளம் ஒன்று உருவாக்கப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில் சீனாவின் அணுசக்தி உருவாக்கம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்கு சீனாவில் கட்டுமானத்தில் இருப்பதாக கூறப்படும் இரண்டாவது புதிய ஏவுகணை தளம் இது என கூறப்படுகின்றது.
இந்த தளத்தில் சுமார் 110 ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தும் நிலத்தடி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னர் கன்சு மாகாணத்தில்பாலைவன பகுதியில் ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தும் 120 குழிகள் இருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
சீனா தனது அணு ஆயுதங்களின் இருப்புக்களை குறைந்த தளத்திலிருந்து இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதாக 2020 ஆம் ஆண்டில் பென்டகன் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் நிலையில் சீனா இதுவரை குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.