தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எங்களுக்கு ஒரு பார்வை இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவிதி எப்படி நிர்ணயிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும்,கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கான கல்வி அமைய என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்கே குளம் கட்ட வேண்டும் எந்த அபிவிருத்தியை கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள் என்பது குறித்து எங்களுக்கு திட்டம் இருக்கின்றது.
திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை.
எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.