கிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது.
ஆபிரிக்க கண்டம், மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளுடன் போராடுவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நான்கு மில்லியன் டோஸ் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி அளவை நைஜீரியாவுக்கும், 5.66 மில்லியன் டோஸ் ஃபைஸர் தடுப்பூசி தென்னாபிரிக்காவுக்கும் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் ஆபிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.64 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வைப்பதன் மூலம், ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்தபடி உலக நாடுகளுக்கு 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
92 குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளுக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் 500 மில்லியன் ஃபைஸர் தடுப்பூசி மருந்துகளை வாங்கி நன்கொடை அளிக்கும் திட்டத்தையும் ஜூன் மாதத்தில் பைடன் அறிவித்தார். ஆனால், அந்த ஏற்றுமதி அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.