அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அத்தோடு, இன்று முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் பிரதமர் கூறியிருந்தார்.
எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை கைவிடுவது குறித்து தீர்மானிக்கப்படுமென ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல் மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 22 நாட்களாக அதிபர் – ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.