திருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போதைய வழிகாட்டுதல்களின் படி 150 பேர் வரை திருமணங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமண வைபவங்களில் கலந்துகொள்வர்களுக்கு மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் எதிர்காலத்தில் இந்த விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் அல்லது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டவர்களை திருமண நிகழ்வுகளில் அனுமதிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் மற்றும் திருமண வைபவங்களை நடத்துபவர்கள் இந்த சூழ்நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் உபுல் ரோஹன கேட்டுக்கொண்டார்.
கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்தால் திருமண நிகழ்வுகளை மட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த வேண்டி ஏற்படும் என்பதால் சுகாதார வழிகாட்டுதல்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.