டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸில் ஜேர்மனியின் அலெக்ஸன்டர் ஸ்வெரவ் தங்கபதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸில் சுவிஸ்லாந்தின் பெலின்டா பென்சிக், தங்க பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸன்டர் ஸ்வெரவ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸன்டர் ஸ்வெரவ், 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று தங்க பதக்கத்தை வென்றார்.
இரண்டாம் இடத்தை பிடித்த கரேன் கச்சனோல் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினின் பப்லோ கரினோ புஸ்டா வெண்கல பதக்கத்தை வென்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிஸ்லாந்தின் பெலின்டா பென்சிக், செக் குடியரசின் மார்கட்டா வோண்ட்ரூசோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெலின்டா பென்சிக், 7-5, 2-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று தங்கபதக்கத்தை வென்றார்.
இரண்டாம் இடத்தை பிடித்த மார்கட்டா வோண்ட்ரூசோவா வெள்ளி பதக்கத்தை வென்றார்.
கஸகஸ்தானின் எலெனா ரைபாகினாவை வீழ்த்தி உக்ரேனின் எலினா ஸ்வீடோலினா வெண்கல பதக்கத்தை வென்றார்.