மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங், அவசரகால ஆட்சி எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஒரு மணிநேர உரையில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான பல கட்சி தேர்தலை’ நடத்துவதாக அவர் உறுதியளித்தார், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை ‘பயங்கரவாதிகள்’ என்று அழைத்தார்.
அவர் தனது அரசாங்கத்தின் கொவிட் கொள்கைகளைப் பற்றி ‘சமூக வலைப்பின்னல்கள் வழியாக போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.
மேலும், ஜெனரல் தனது உரையில், சதித்திட்டத்தை எதிர்ப்பவர்கள் கொவிட்-19 தொற்றை வேண்டுமென்றே பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.
தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக விளக்கம் அளித்த இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.
இதனைத்தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது இதுவரை 900க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், இராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம் நீடிக்கிறது.