ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்த அவசரமாக (அமெரிக்காவால்) முன்வைக்கப்பட்ட திட்டமானது அமைதியை ஏற்படுத்தத் தவறியதுடன், ஆப்கான் மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாகாண தலைநகரங்கள் மற்றும் பெரிய நகர்ப்புற பகுதிகளை தலிபான்களிடமிருந்து பாதுகாப்பதற்கு தனது நிர்வாகம் தற்போது முன்னுரிமை அளிக்கும்.
நாட்டில் மோசமான வன்முறை ஏற்பட்டிருப்பதற்கு அமெரிக்க படைகள் அவசரமாக வெளியேறியதே காரணம். தலிபான்களுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்றுபட்டு நிற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தலிபான்களுக்கு அமைதியில் நம்பிக்கையில்லை. அவர்களைத் தோற்கடிக்கும் திறன் அரசாங்கப் படைக்கு உள்ளது. இப்போது நடைபெற்று வரும் சண்டையில் அடுத்த 6 மாதங்களில் ஒரு மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் தலிபான்களுக்கு பின்னடவை ஏற்படுத்தும்’ என கூறினார்.
ஒகஸ்ட் 31ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
வெளிநாட்டு துருப்புக்கள் மீளப் பெறப்பட்டதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ள தலிபான்கள், பெரும்பால பகுதிகளை கைப்பற்றிவிட்டனர். இதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள 400 மாவட்டங்களில், 200 மாவட்டங்கள் வரை தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டின் 90 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அண்மையில் அறிவித்தனர்.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகள் அடங்களாக நாட்டில் பாதி பகுதிகளைக் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். தலிபான்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், எதிர்வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.