கடலோரம் மற்றும் கடல் பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோர பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு பதிலளித்த அஜய் பட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுக்கு சுதந்திரமான மதிப்புண்டு. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தெளிவாக வரையறுக்கப்பட்ட கொள்கையை அரசு கொண்டுள்ளது.
அது ஸ்திரத்தன்மை மற்றும் வளத்துக்காக மக்கள் நலன் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய கடற்படை, மத்திய,மாநில கடலோர காவல் படை உள்ளிட்ட அமைப்புகள் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் ரேடார்கள், தானியங்கி அடையாளம் கண்டறியும் அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி மின்னணு கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.