தலைமுறையின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் புகழ் பூத்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனாவிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்.
இதனை உறுதிசெய்துள்ள பார்சிலோனா கழக நிர்வாகம், இதுதொடர்பாக அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
இதில், ‘பார்சிலோனா கழகம், மெஸ்ஸி இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் புது ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்யப்பட்ட நிலையில், விரும்பியபடி நிகழ்வுகள் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் நிதி நெருக்கடி, கட்டமைப்பு தடைகள்தான். பார்சிலோனா அணிக்கு மெஸ்ஸி ஒப்பந்தமாகவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மெஸ்ஸி இனி எந்த கழகத்தில் வேண்டுமானாலும் இணைந்து விளையாடலாம். 34 வயதான அர்ஜென்டீனாவின் மெஸ்ஸி, பார்சிலோனாவிலிருந்து விலகியுள்ளமை அந்த அணியின் இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள போதிலும் அவர் அடுத்து எந்த கழக அணியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் மெஸ்ஸி இரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, இதுவரை அந்த அணிக்காக 778 போட்டிகளில் விளையாடி 672 கோல்களை அடித்துள்ளார். அத்துடன் 305 கோல்கள் அடிக்க துணை புரிந்துள்ளார்.
அத்துடன் 10 லா லிகா சம்பியன் பட்டங்கள், 8 சுப்பர் கோபா கிண்ணங்கள், 7 கோபா டெல்ரே கிண்ணங்கள், 4 சம்பியன்ஸ் லீக் கிண்ணங்கள், 3 யு.இ.எஃப்.ஏ சுப்பர் கிண்ணங்கள், 3 கழக உலகக்கிண்ணங்களை வென்றுக்கொடுத்துள்ளார்.