தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என உலக சுகாதார நிறுவனம் முன்வைத்திருந்த கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.
மாறுபாடு அடைந்துள்ள டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக ஜேர்மனி, பிரான்ஸ் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது டோஸ் செலுத்த தயாராகி வருகின்ற நிலையில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
ஆனால், இந்த கோரிக்கையை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன. செப்டம்பர் மாதம் முதல் முதியவர்கள் மற்றும் எளிதில் உடல்நிலை பாதிக்கக்கூடிய நபர்களுக்கு தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்த ஜேர்மனி அரசாங்கம் விரும்புவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை 64.5 சதவீத மக்களுக்கும், ஜேர்மனியில் 62 சதவீத மக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிரான்ஸில் 49 சதவீதம் பேருக்கும், ஜேர்மனியில் 53 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.