தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ், ‘எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.
பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
லண்டனில் செயற்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் கடந்த வாரம் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது. இதில் பிரித்தானியா மற்றும் ரோமேனியாவை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயற்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.