இராணுவத்தால் நடத்தப்படும் 24 மணிநேர தடுப்பூசி நிலையங்களில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என அரச தாதியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், இதுபோன்ற நிலையங்களில் தினமும் சுமார் 10,000 பேர் வரிசையில் நிற்பதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கை கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் இந்த சூழல் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையங்கள் அனுபவமில்லாத இராணுவ ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவதே இந்த தாமதத்திற்கு காரணம் என்றும் இதன் காரணமாகவே தடுப்பூசி நடவடிக்கையை விரைவுபடுத்த முடியவில்லை என்றும் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
ஆகவே இவற்றை கொழும்பில் உள்ள இலங்கை தேசிய வைத்தியசாலையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் இரண்டு மணி நேரத்திற்குள் 100,000 தடுப்பூசியை அனுபவமுள்ள தாதியர்கள் செலுத்த முடியும் என்றும் கூறினார்.
நாட்டில் 38,000 தாதியர்கள் உள்ள நிலையில் இந்த தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் ஏன் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் சமன் ரத்னபிரிய கேள்வியெழுப்பினார்.
மேலும் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையை 100,000 ஆக அதிகரிக்கவும் முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.