திருகோணமலை – கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு புனரமைக்கப்படாததால், மண் சரிவுகள் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆற்றில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாலும் பற்றைக்காடுகளாக புற்கள் நிறைந்து காணப்படுவதாலும் பாரிய அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆறு கந்தளாய் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்து தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை கப்பல்துறை ஊடாக திருகோணமலை கொட்டியாரக் குடா கடலுடன் கலக்கின்றது.
இந்த ஆற்றினை திருகோணமலை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆற்றில் ஓரமாக சென்ற பாதை இடிந்து போயுள்ளதாகவும் தடுப்புச் சுவர் ஒன்றினை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றுக்கான தடுப்புச் சுவர் அமைத்து தருமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
1986ஆம் ஆண்டு கந்தளாய் குளம் உடைப்பெடுத்து 67 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.