ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் சபையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் டியூமேல் கூறுகையில், ‘அடுத்த மாதம் 28ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
9 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் சபையின் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.
எனினும், ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை ரிச்சர்ட் டியூமேல் வெளியிடவில்லை.
முன்னதாக, தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டியின் ஜனாதிபதி 53 வயதான ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.
இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள அவர் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.
இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், 28பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 26பேர் கொலம்பியாவையும், 2பேர் ஹெய்டி தீவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க நாட்டவர்கள். அத்துடன், இந்த 28பேரில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.
மேலும், 3 கொலம்பியர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். எஞ்சிய 8பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது