யாழ்.வடமராட்சி- கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நில அளவை மேற்கொள்ளும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.
யாழ்.வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென நான்கு ஏக்கர் தனியார் காணியை சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கை இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு இடம்பெறவிருந்தது.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர செல்வராசா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
குறித்த காணியை நில அளவை செய்ய வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ள செல்லவிடாது வீதிக்கு குறுக்கே தடுத்து நிறுத்தியதுடன் குறித்த காணிகளை இராணுவத்திற்க்கு வழங்க விடமாட்டோம் என தெரிவித்து கோஷங்களையும் எழுப்பினர்.
இப்போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் அதிகாரிகளிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதை அடுத்து, நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை போராட்ட இடத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஆயதங்களுடனும் சிவில் உடையுடனும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.