ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கத்தை நியூஸிலாந்து அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி நியூஸிலாந்து முழுவதும் நாளை புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர் சென்றுவந்த கடலோர நகரம் ஏழு நாட்களுக்கு முடக்கப்படும் என்றும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
4ஆம் நிலையில் கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் சுமார் 2,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதேநேரம் முடக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து நியூஸிலாந்து டொலரின் பெறுமதி 1.5 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.