நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, இன்று (வெள்ளிக்கிழமை) விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார்.
குறித்த உரையில், நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அவர் தெரியப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த உரையினை நிகழ்த்துவதற்கு முன்னதாக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் தலைமை பீடாதிபதிகளை இன்று காலை சந்திக்கும் ஜனாதிபதி, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் 10 பிரதான பங்காளிக் கட்சிகள், ஏனைய சில கட்சிகள், சமூக அமைப்புகள், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள், நாட்டை உடனடியாக முடக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதியின் இன்றைய உரை, மிகவும் முக்கியத்துவதம் வாய்ந்த ஒன்றாக அமையுமென அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.