இலங்கை மற்றும் உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் அவர்கள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு மத்தியில் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
சில நேரங்களில் பல ஆண்டுகளாக, தங்கள் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் பற்றிய செய்திகளுக்காக உறவினர்களும் குடும்பமும் காத்திருப்பதாகவும் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை உண்மையை கண்டறிவதற்கான தேடல் அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் கூறினார்.
குறிப்பாக குறித்த போராட்டத்தில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடும் நிலையில் அவர்கள் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா. வதிவிட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பின்மை உணர்வு காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் சமூகங்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தையும் பாதிக்கிறது என்றும் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.