ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகவே அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்பதோடு நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை மூலம் மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டு அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையானது அவர்களின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான செயற்பாடாக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை ஒரு ஆபத்தான நிலையை எடுத்து காட்டுவதாக குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, இதன் உண்மை நோக்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதாகும் என்றும் குற்றம் சாட்டினார்.
எனவே குறித்த அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எவ்ண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.