மெக்ஸிக்கோவின் மத்திய ஹிடெல்கோ மாநிலத்தில் வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையின் சிகிச்சை அறையில் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டிருந்த கொரோனா தொற்று உறுதியான நோயாளர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக நதி நீர் பெருக்கெடுத்து நகரில் உள்ள வைத்தியசாலையில் புகுந்தமை காரணமாக அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அதேநேரம் வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் 40 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் தங்குமாறு மெக்ஸிகோ ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதேவேளை மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.