அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் ஓர் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கக் கூடியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் காணாமல் போன தமிழர்களுக்கு இராணுவமே பொறுப்பு என்ற போதிலும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கான நியமனங்கள் இராணுவத்தினரின் அணிவரிசைகளில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அலுவலகத்தில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதால் தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் தமிழ்ப் பொது மக்கள் அஞ்சுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு சிங்களம் பேசும் பிரதம செயலாளர் வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை, படுகொலைகள் மற்றும் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் தடை ஏற்படுத்தப்பட்டமை குறித்தும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தமது உறவுகளை தேடியும் நீதிகோரியும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய உளவுப் பிரிவுகளால் மிரட்டப்படும் சம்பவம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.