நெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் ‘பொருநை’ அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என்றும் கீழடி அகழாய்வு மூலம் சங்ககால தமிழர்களின் வரலாற்றை உலகமே அறிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு இந்த அகழாய்வை பாதியிலேயே கைவிட்டுள்ளதாகவம் அவர் சாடியுள்ளார்.
இந்த நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக, இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் இது ‘பொருநை அருங்காட்சியகம்’என அழைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.