நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஊரடங்கை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ள நிலையில் இருப்பினும் இன்று நடக்கும் கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர், நாளாந்தம் 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகியதுடன் 200 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகின.
தற்போது நாளாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 3000 க்கும் குறைவாக உள்ளது மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
எனவே, பயணக் கட்டுப்பாடுகள் நோயாளிகளின் எண்ணிக்கையையும் இறப்பையும் குறைக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
எவ்வாறாயினும் பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.