மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
இதன்போது மரணதண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
மேலும் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்தோடு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.