கொரோனா தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தெளிவான மாற்றுத் திட்டம் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க 21 அம்ச திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு இந்த நெருக்கடியை சமாளிக்க நாடாளுமன்ற அதிகாரங்களை முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பணியை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றினை அரசியலாக்க கூடாது என குறிப்பிட்ட ஆசு மாரசிங்க, இந்த நெருக்கடியை சமாளிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.